சென்னை: சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆந்திராவில் உள்ள நீர்ப்பாசன அலுவலர்களிடம் கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையிலிருந்து திறக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் (ஜூன் 14) ஆந்திராவின் நீர்ப்பாசன அலுவலர்கள் கண்டலேறு அணையிலிருந்து 2100 கன அடி நீரைத் திறந்து விட்டனர். இது கண்டலேறு - பூண்டி கால்வாய் வழியாக இன்று காலை 10 மணியளவில் ஜீரோ பாயிண்ட் ஊத்துக்கோட்டை பகுதியை அடைந்தது. இன்று மாலை கிருஷ்ணா நதிநீர் பூண்டி அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டலேறு - பூண்டி கால்வாய் 152 கிலோ மீட்டர் தூரம் வறண்டு கிடந்ததால், நீர்வரத்து ஊத்துக்கோட்டைக்கு வரும்போது வெகுவாகக் குறைந்து 200 கன அடியாக இருந்தது. மேலும், இது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த் தேக்கத்தை அடையும்போது, 100 கன அடியாகக் குறையலாம் என்று பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"தற்போது பூண்டி அணையின் மொத்த இருப்பு 166 மில்லியன் கியூபிக் அடியாக உள்ளது. கண்டலேறு அணையிலிருந்து 2500 கன அடி நீர் தற்போது திறக்கப்பட்டிருக்கும் வேளையில், இதனை 3000 அல்லது 4,000 கன அடியாக அதிகரிக்கவும் ஆந்திர மாநில அரசு உறுதியளித்துள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.