சென்னை : தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளின் வீடுகள் முன் கரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சென்னையில் உள்ள அவரது இல்லம் முன்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.