சென்னை: சாந்தோமில் உள்ள ரபேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தேர்வு எழுத செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 22 ஆயிரத்து 654 பேர் எழுத உள்ளனர். புதுச்சேரியும் சேர்த்து 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வினை எழுத வேண்டும் என முதலமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மாணவர்கள் அச்சமின்றி மகிழ்ச்சியாக தேர்வு எழுதி வருகின்றனர்.
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள்கள் வழக்கம்போல் திருத்தப்படும். சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் ஜூலை மாதத்திற்குள் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இலங்கை அகதி மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்வு இன்று தொடங்கியது..