ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாயைப் பிரிந்து ஊருக்குள் புகுந்த, மூன்று மாத பெண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டபோதும், அடுத்த சில நாட்களில், அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்தது.
பொதுமக்கள் தகவல் தெரிவித்ததால், குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், சத்தியமங்கலம் புலிகள் சரணாலய விலங்குகள் பராமரிப்பு மையத்துக்கு அழைத்துச் சென்று அம்முக்குட்டி எனப் பெயர் சூட்டிப் பராமரித்தனர்.
இத்தருணத்தில் குட்டி யானை அம்மு குட்டியை வனப்பகுதிக்குள் விடுவதற்குத் தடை விதிக்கக்கோரி, விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அம்மனுவில், “காட்டில் விடப்பட்டுள்ள குட்டி யானையை தற்போது வரை யானைகள் கூட்டம் சேர்த்துக் கொள்ளவில்லை. மற்ற மிருகங்களால் குட்டி யானை அம்முகுட்டிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மிருக காட்சி சாலையிலோ, யானைகள் முகாமிலோ வைத்துப் பராமரிக்கக் கோரி வனத்துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காட்டில் விடப்பட்ட குட்டி யானையை தினமும் 5 வனத்துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.
ஆனால் காட்டுக்குள் விடப்பட்ட குட்டி யானை அம்முகுட்டியை யானைகள் கூட்டம் சேர்த்துக் கொள்ளாததால் முகாமில் வைத்துப் பராமரிக்க உள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.