சென்னை: வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தாமோதரபும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது மனைவி அனுராதா, மகள் ஹரிணி ஆகியோருடன் வந்து வாக்குச் செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “சட்டப்பேரவைத் தேர்தலில் பெரியளவில் மாற்றம் வரும். கோவில்பட்டி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன்.
பெரிய அளவில் நல்லதொரு மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள். அதிமுகவின் செயல்பாடுகள் வேடிக்கையாக இருக்கிறது. அதற்கான முடிவு மே 2ஆம் தேதி தெரியும்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன. இத்தேர்தலில் தீய சக்திகளையும், துரோக சக்திகளையும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.
சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவிப்பார். தேர்தலுக்குப் பின்னரும் அமமுக தொடர்ந்து வழக்கம்போல் செயல்படும்” என்றார்.
தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் தாக்கப்பட்டதும், மதுரவாயலில் அமைச்சர் பெஞ்சமின் வாக்குச்சாவடியில் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “இது அவர்களின் தோல்வி பயத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு முடிவு செய்துவிட்டார்கள் எனத் தெரிந்த பின்னர் பதற்றத்தில் ஆளுங்கட்சியினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அமைச்சர்கள் வலுவாக உள்ள சில தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் 10 கோடி ரூபாய்க்கும் மேல் விலை பேசப்பட்டுள்ளதால், அவர்கள் அது போன்று நடந்துகொண்டுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது என்றார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் வேண்டும் என்று கூறிய அவர், வாக்கு இயந்திரங்களை வைக்கும் அறைகளில் ஜாமர் கருவி பொருத்த வேண்டும் எனவும் கோரிக்கைவைத்தார்.