மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமாக டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறைவுசெய்துள்ள அவருக்கு இன்னும் ஓராண்டு தண்டனை காலம் மீதம் உள்ளது. இதையடுத்து அவர் மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய ஆனந்த்துக்கும், சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் பேத்திக்கும் (பாஸ்கரனின் மகள்) மார்ச் 5ஆம் தேதி மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் திருமணம் நடக்கவுள்ளது.
இந்தத் திருமணத்தில் சசிகலா கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என இரு குடும்பத்தினரும் விரும்புகின்றனர். இதனால் அவரை பரோலில் வெளியே அழைத்துவர முடிவுசெய்துள்ளனர். இவர்களது விருப்பத்தை நிறைவுசெய்யும் விதமாக சசிகலாவும் பரோலில் வெளியே வர சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் பரோல் கேட்டு அவர் விண்ணப்பம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா கடந்த மூன்று ஆண்டுகளில் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது 10 நாள்கள் பரோலில் வந்தார். இதன் பின்னர் நடராஜன் உயிரிழந்தபோது இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக 15 நாள்கள் பரோலில் வந்தார். ஆனால் இரண்டாவது முறை பரோலில் வந்தபோது ஒன்பதாவது நாளிலேயே சிறைக்கு திரும்பிவிட்டார்.