தமிழ்நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மகளிர் காவல் நிலையங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இத்தனிப்பிரிவு பெண்கள் பாதுகாப்பிற்காக ’பிங்க்’ நிறத்தில் வடிவமைக்கப்பட்ட ‘அம்மா பேட்ரோல்’ என்ற புதிய ரக வாகனம் ஒன்றினை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இவ்வாகனத்தில் குழந்தைகளுக்கான ஹெல்ப்-லைன் எண்ணான1098ம், பெண்களுக்கான ஹெல்ப்-லைன் எண்ணான 1091ம்அச்சிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, எவரேனும் பெண்களைக் கேலி செய்வது, பாலியல் வன்புணர்வு உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவித்தால் ’அம்மா பேட்ரோல்’ வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்குக் காவல்துறையினர் உதவும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக சென்னையில் உள்ள காவல்நிலையத்திற்கு 35 ரோந்து வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. மற்ற மாவட்ட காவல்நிலையங்களுக்கும் ‘அம்மா பேட்ரோல்’ வாகனம் விரைந்து வழங்கப்படும் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.