ஏழை எளியோர் சுகாதார நலனுக்காக தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கிராமப்புறங்களில் 1,400, சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் கிளினிக்குகள் 200 என இவை அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை தொடங்கும் வகையில், மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அம்மா மினி கிளினிக்கிற்கு அவர் இன்று குத்து விளக்கேற்றினார்.
சென்னையில் முதல் கட்டமாக 47 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பர். காலை 8 முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை என 8 மணி நேரம் இந்த அம்மா கிளினிக்குகள் செயல்படும். இங்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மேலும், காய்ச்சல், சளி உள்ளிட்ட சாதாரண உடற் தொந்தரவுகளுக்கு மட்டுமே மினி கிளினிக்கிற்கு வந்து பயனடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, ராயபுரம் மற்றும் ஷேக் மேஸ்திரி தெருவில், மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதையும் படிங்க: மெர்சல் காட்டும் மெரினா: பொதுமக்களுக்கு இன்றுமுதல் அனுமதி!