ஆம்பன் புயல் தற்போது வடக்கு - வடக்கிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கக் கடற்கரையை நாளை மாலையோ அல்லது இரவிலோ கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலினால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், சென்னையில் கடல் இன்று காலை முதலே சீற்றத்துடன் காணப்பட்டது. இதுதவிர, சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. புயல் தாக்கம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயர் தீவிர புயலானது ‘ஆம்பன்’ - மீனவர்களுக்கு எச்சரிக்கை!