கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 28வரை மூன்று நாள்களுக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி நேற்று (ஏப்ரல் 24) அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக, காய்கறி, மளிகைக் கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளதால் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகளை இன்று ஒருநாள் மட்டும் கூடுதலாக இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில், நாளை முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளதால் பொது மக்களின் வசதிக்காக, இன்று (25.4.2020) மட்டும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.
பொருள்கள் வாங்கச் செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்..