2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்ல கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால், எதிர்வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நடத்தை விதிகள் அமலுக்கு வரும் போது, அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க கோரி, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அரசுத்துறை பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்ததாரர்களிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியாளர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்க வேண்டியுள்ளதாகவும், அதற்காக குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், பணத்தை கொண்டு செல்ல முடியாது என்பதால், இரண்டு லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வில் நாளை (பிப். 25) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க...நெல்லை தொகுதி பாஜகவுக்கா? - அதிர்ச்சியில் அதிமுகவினர்!