சென்னை தலைமைச் செயலகத்தில், காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை கெளரவப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீரர்களுக்கு பரிசுத்தொகையும், ஊக்கத்தொகையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், 'நடந்து முடிந்த 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் பரிசுத்தொகையும், ஊக்கத்தொகையும் வழங்கினார். மேலும், டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் 3 தங்கம்,1 வெள்ளிப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமையை தேடித்தந்தமைக்காக வீரருக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
அதேபோன்று டேபிள் டென்னிஸ் வீரர், சத்யன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பின்னர், ஸ்குவாஷ் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற வீரர் சவுரவ் கோஷலுக்கு 40 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
அதேபோன்று வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தமிழ்நாடு வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்றதற்காக 35 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
பின்னர், பயிற்சியாளர் 5 பேருக்கு ஊக்கத்தொகையாக 51 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் 75ஆவது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்ற பிரணவ் வெங்கடேஷ்க்கு 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 4 கோடியே 31லட்ச ரூபாய் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் தமிழ்நாடு சார்பில் தங்கம் வெல்வதற்காக 9-12 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டு, வரும் காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதற்காக வீரர்களுக்காக முதற்கட்டமாக 25 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். மேலும், அதை மேம்படுத்துவதற்கான பணியில் துறையின் செயலாளர் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எரிசக்தித் துறை சார்பில் ரூ.258 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்