காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சில பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கை கண்காணிக்க மண்டலம் வாரியாக ஏ.டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டங்களில் நிர்வாகப் பணிகளையும் சீரான முறையில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலையைக் கண்காணிக்க வசதியாக கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.