சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நீட் எனும் விஷப்பாம்பை தமிழ்நாட்டில் நுழைய விட்டது திமுக - காங்கிரஸ் கூட்டணிதான். தற்போது நீட்டை எதிர்த்துப் போராடும் அவர்களை மாணவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் "மத்திய அரசு இந்தாண்டுக்கான பேரிடர் நிவாரண நிதி ஆயிரத்து 900 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. அதை படிப்படியாக கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தயார் நிலையில் உள்ளன.
கடந்தாண்டுகளில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை துல்லியமாக கணித்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் நடைபெறுவதால் இரண்டாவது தலைநகரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனாலும் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், சென்னையின் பணிச் சுமைகளை குறைப்பதற்காகவும் இரண்டாவது தலைநகரம் வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து பரிசீலனை செய்துவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மண்ணின் ஊட்டச்சத்து குறைபாட்டால் வாழை மரங்கள் கருகுகின்றன' - ஆர்.பி. உதயகுமார்!