சென்னை ராயபுரத்தில் அதிமுக வடசென்னை தெற்கு ( கிழக்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இன்று (டிச.3) நடைபெற்றது. 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்குவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசியல் கட்சி தொடங்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. நடிகர் ரஜினிகாந்த் அவரது கட்சியின் கொள்கை, லட்சியத்தை அறிவித்தால்தான் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும். ரஜினியின் அரசியல் வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. எங்களது வாக்கு வங்கி எப்போதும்போல நிலையானதாக இருக்கும். எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியும், ஜெயலலிதாவின் வாக்கு வங்கியும் யாராலும் பறிக்க முடியாது. ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என ரஜினி தெரிவித்தது திமுகவை சுட்டிக்காட்டிதான்.
வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை தலைதூக்க விடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் நோக்கம். 2021ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வர உழைப்போம். திமுக ஆட்சி செய்த காலங்களில் விவசாயிகளின் உரிமைகளை பறித்துவிட்டு, இப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக இருப்பதாக காட்டிகொள்ள முயற்சிக்கிறது. அதிமுகதான் என்றும் விவசாயிகளின் நண்பன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : விவசாயிகளுக்காக போராட்ட கொடி தூக்கும் திமுக