அதிமுகவினர் யாரும் ஊடகங்களில் கருத்துகளை தன்னிச்சையாக கூற வேண்டாம் என்று அதிமுக தலைமை நேற்று அறிவித்திருந்த நிலையில், ஊடகங்களுக்கு இன்று அதிமுக எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ’அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ கருத்துகளை தெரிவிக்க கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களைத் தவிர, மற்றவர்கள் கழகத்தின் சார்பில் கருத்துகளை ஊடகங்கள், பத்திரிகைகள் வழியாக தெரிவிப்பது முறையாக இருக்காது.
எனவே, இனி கட்சி பிரதிநிதிகள் என்றோ, கட்சியின் பெயரை வேறு எந்த வகையிலோ பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும், வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு மீறுகின்ற பட்சத்தில் அந்த நபர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கோ, செய்திகளுக்கோ அதிமுக எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறோம்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.