அதிமுக சார்பில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அமமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவில் நீண்ட நாட்களாக உழைத்த உண்மை தொண்டர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சதியால் தான் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பத்தாண்டு காலம் சிவகாசித் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீண்டும் அங்கு போட்டியிடாமல், ஏன் ராஜபாளையத்திற்கு ஓடுகிறார்.
இது தொடக்கம்தான். தொடர்ந்து பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து விலகி இங்கு வரவுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் அதிமுகவை தோற்கடிப்பதே எங்கள் லட்சியம்.
அதிமுகவில் ஜெயலலிதா உற்சவர் என்றால், சசிகலா தான் மூலவர். அதிமுகவையும் ஜெயலலிதாவையும் 32 ஆண்டுகளாக இயக்கியதே சசிகலா தான். தொண்டர்களே சசிகலாவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வருவார்கள். இனி ஆண்டவனாலும் அதிமுகவை காப்பாற்ற முடியாது. சசிகலா ஒருவரால்தான் அதிமுகவை காக்க முடியும்” என்றார்.
கட்சிக்கு களங்கம் விளைவித்ததாகக்கூறி, ராஜவர்மனை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் 5 தொகுதிகளில் அதிமுக நேரடி போட்டி!