சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் அலுவலகம் சூறையாடப்பட்டு, கட்சி நிதி, ஆவணங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டதாக ஈ.பி.எஸ் ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 4 தனித் தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. ஆனால் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சி.வி சண்முகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில் அ.தி.மு.க தலைமை அலுவலக வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு, டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கடந்த 7ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதி என இரு முறை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினர். அதேபோல அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் கடந்த 14 ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 1 ½ மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வழக்கின் அறிக்கையை 19ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சி.வி சண்முகத்திடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 1 மணி நேரமாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்ற டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி கலவரச் சம்பவத்திற்கான காரணம் யார்..? என்பது குறித்த அவரது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அடுத்தக்கட்டமாக கலவரச் சம்பவம் தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் அகற்றம்