சேலம்: அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி தலைமையில், சேலம் மாவட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
சசிகலா, கடந்த சில நாட்களாக அதிமுகவில் உள்ள அவரின் விசுவாசிகளுடன் தொடர்புகொண்டு பேசிவருவது குறித்து கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அவரின் அழைப்பு வந்தால் யாரும் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கண்டிப்புடன் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சுருக்கமாகப் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், "பொதுச்செயலாளர் தேர்தல் மிக விரைவில் நடக்கவுள்ளது. அதற்காக மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஒரு மாத காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
திமுகவும் சசிகலாவுடன் மறைமுக கூட்டு வைத்துக்கொண்டு, நம்மை அரசியலில் பழிவாங்குகிறார்கள். அவர்களின் சதியை முறியடிப்போம்" என்று கூறி அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் கையெழுத்து பெற்றுக்கொண்டு கூட்டத்தை முடித்துள்ளார்.
ஓமலூர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கீழ்வருமாறு:
அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர், கட்சி மற்றும் தமிழ்நாட்டின் ஜெயலலிதா 34 ஆண்டுகள் அரும்பாடுபட்டார். அவரின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை ஒற்றுமையாக வழிநடத்தி, சிறப்பாக ஆட்சி நடத்திச் செல்கின்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பல கட்சிக் கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதி உள்ளிட்டவற்றுடன் திமுக மற்றும் எதிர் அணியினர் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு விழுக்காட்டில் வெற்றி பெற்றிருக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவின் 66 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் உரக்கக் குரல் எழுப்பி, மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
விநோத நாடகம்
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தான் அரசியலிலிருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாகப் பகிரங்கமாகச் செய்தி வெளியிட்ட சசிகலா, தேர்தல் முடிவுக்குப் பின்னர் அரசியலில் முக்கியத்துவம் பெற, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக, விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். அவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை.
தொலைபேசியில் சசிகலா பேசும்போது, சாதிய உணர்வுகளைத் தூண்டும் விதமாகப் பேசுவது, ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாக வாழும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதை அதிமுக சேலம் புறநகர் மாவட்டம் சார்பாகக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்சியின் நடவடிக்கைக்குப்பட்டவர்கள், தவறாகப் பேட்டி அளித்து தலைமை மீது சேற்றை வாரிப் பூசுவதைப் போன்ற செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
ஜெயலலிதா மற்றும் அதிமுக செயல் வீரர்களின் உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும், தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர், மீண்டும் அதிமுகவை அபகரித்துவிட வஞ்சக வலையை விரித்துக் கொண்டுள்ளனர்.
ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக, அதிமுக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை, அதிமுகவிலிருந்து உடனடியாக நீக்கியதையும், அதிமுக தலைமை அலுவலகக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வரவேற்கிறோம்.
தேர்தல் வெற்றிக்காகப் பாடுபட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் ஆகியோருக்கு நன்றி.
கட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்
இந்த திடீர் கூட்டத்திற்குப் பிறகு ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் சித்ரா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.
அப்போது அவரிடம், ஏன் திடீர் கூட்டம் என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, "அது கூட்டம் இல்லை. உடனே வரும்படி கூறினார்கள். மாவட்ட அலுவலகம் சென்றோன். கையெழுத்துப் போடச் சொன்னார்கள்; போட்டேன். வேறு ஒன்றும் பேசவில்லை.
சசிகலாவிடம் இருந்து எனக்கெல்லாம் அழைப்பு வரவில்லை. வந்தாலும் நான் பேசமாட்டேன். கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடப்பேன்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
பத்தே நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மணி, நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, ஜெயசங்கரன், சுந்தர்ராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தீர்மானம்
இதேபோல் வட சென்னை தெற்கு மாவட்ட சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். இந்த கூட்டத்திலும் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், "அதிமுக அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, கட்சி அழிந்து விடும் என்று எண்ணித் தான் அரசியலிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
ஆனால் கட்சி தொண்டர்களும், தலைவர்களும் எழுச்சியோடும், வளர்ச்சியோடும், ஒற்றுமையோடும் இருப்பதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கோடு சதி வேலையில் ஈடுபட்டுவரும் சசிகலாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.