துக்ளக் இதழின் 51ஆவது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜனவரி 14) நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் பாஜக மாநில தலைவர் எல். முருகன், துணை தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் நிகழ்ந்த மாற்றங்களாலேயே துக்ளக் மீண்டது எனவும், அதிமுகவுக்கு யாரெல்லாம் தொல்லை கொடுத்தார்களோ அவர்களாலேயே துக்ளக் வளர்ந்தது எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி மற்றொரு திமுக போல் மாறியிருப்பதால், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர், யார் தேசியத்தை நேசிக்கிறார்களோ அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க விரும்பும் சூழல் நிலவுவதாக தெரிவித்தார். திமுக கூட்டணியை வீழ்த்த கங்கை ஜலமாக இருந்தாலும், சாக்கடை ஜலமாக இருந்தாலும் ஏற்க வேண்டும் என, சசிகலாவுடன் அதிமுக இணைவது குறித்து குருமூர்த்தி சூசகமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் வளர்வதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், நான்கு ஆண்டுகளில் பாஜக மிகப் பெரிய சக்தியாக மாற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். அதிமுக - திமுக இரண்டும் ஊழல் கட்சிகள் என்று விமர்சித்த அவர், அதிமுக தேசிய வாதத்தை ஏற்பதாகவும் திமுக இந்து விரோத கட்சி என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, சிறந்த கலாசாரங்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றார். பிரதமர் மோடியின் திட்டங்கள் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை அமல்படுத்தப்பட்ட பிறகும் காஷ்மீர், லடாக், அருணாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.