சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு ஒரு நாள் பயணமாக இன்று (மே. 26) வருகிறாா். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில், தேசிய நெடுஞ்சாலை புதிய திட்டங்கள், ரயில்வே புதிய திட்டங்கள் உட்பட மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமா் தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ஹைதராபாத்திலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறாா். சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. உடனடியாக மாலை 5.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு செல்கிறார்.
அங்கு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, விழா முடிந்ததும் மீண்டும் நேரு ஸ்டேடியத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு வருகிறார். அங்கிருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டரில் இரவு 7.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறாா். பிரதமருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி சென்னை பழைய விமான நிலையத்தில் நடக்கிறது. அது முடிந்ததும் பிரதமர் இரவு 7.40 மணிக்கு இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது. அதில் ஹைதராபாத்திலிருந்து விமானத்தில் வரும் பிரதமர் மோடி சென்னையில் தரையிறங்கியதிலிருந்து விழா நடைபெறும் சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் இருக்கு செல்வது வரை எந்த மாதிரியான பாதுகாப்பு அளிப்பது குறித்து நேற்று (மே. 25) ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சி சென்னை விமான நிலையத்திலிருந்து நேரு ஸ்டேடியத்திற்கும் பின்பு நேரு ஸ்டேடியத்தில் இருந்து விமான நிலையத்திற்கும் நடைபெற்றது. இதனால் சென்னையில் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி சென்னை வருகை; போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்புள்ள இடங்கள்?