சென்னை: பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது லால்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சௌந்தரபாண்டியன் பேசினார்.
அதில், "கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் எனது தொகுதிக்கு எந்தவித கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள், அது தொடர்பாக பரப்புரையில் ஈடுபடும் வல்லுநர்கள் ஆகியோர்களுக்கு அரசு சிறப்பு விருதுகள் வழங்கி கெளரவிக்க வேண்டும்.
லால்குடியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மக்காச்சோளம் அதிகமாக விளைகிறது. தற்பொழுது மக்காச்சோள விதைகள், பருத்தி விதைகள் ஆகியன அதிக விலையில் விற்கப்படுகின்றன.
இதனைத் தடுக்கும் வகையில் மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தி மக்காச்சோள, பருத்தி ஆகியவற்றின் விதைகளைக் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.