சென்னை: மத்திய அரசின் அக்னிபாத் என்கிற புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாக, பிஹார், உ.பி உள்ளிட்ட வடமாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ரயில்களில் தீ வைக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதே சமயம் இந்தப் போராட்டம் தென்னிந்தியாவுக்கும் பரவியதை அடுத்து தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையம் தீ வைக்கப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தினால் 200 ரயில் சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. மேலும் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 13 ரயில் சேவைகள் இடையே நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெங்களூரிலிருந்து தானாப்பூர் வரை செல்லும் சங்கமித்ரா விரைவு வண்டி தெலங்கானா மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் ரயில் தீ வைப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து பிகார், கிழக்கு உத்தரப்பிரதேசம் செல்லும் அனைத்து ரயில்களுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால், இந்த வழித்தடங்களில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானா வன்முறையில் உயிரிழந்த இளைஞர் யார் தெரியுமா...?