சென்னை: தமிழ்நாட்டில் முதுகலை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வினை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பினை உயர்த்த வேண்டுமென பணிக்கு விண்ணப்பிக்கக் காத்திருந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைவைத்து-வந்தனர்.
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்சவரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
ஆசிரியர் நியமனத்திற்கான வயது உச்சவரம்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயதுவரம்பு பொருந்தும். உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 2022 டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த உயர்த்தப்பட்ட உச்சவரம்பு 2022 டிசம்பர் 31ஆம் தேதிவரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிப்புகளுக்குப் பொருந்தும்.
மனிதவள மேலாண்மைத் துறை அரசு உத்தரவின்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 2023 ஜனவரி 1 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!