அரசு போக்குவரத்து கழகத்தின் வேலூர் மண்டலத்திற்கான நடத்துநர் பணிக்கு நாராயணன் என்பவரை கடந்த 2007ஆம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்தது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் அவரது பிறந்த தேதி 1965 ஜூன் 20 என்றும், மாற்று சான்றிதழில் 1967ஆம் ஆண்டு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நாராயணனுக்கு வேலை வழங்க போக்குவரத்து கழகம் மறுத்துள்ளது.
இதை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையை அணுகிய நாராயணன், பிறந்த ஆண்டை 1967 என மாற்றம் செய்து புதிதாக மதிப்பெண் சான்றிதழ்களை 2009 ஆம் ஆண்டு பெற்று, அவற்றை 2013 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இவ்வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து கழகம் தரப்பில், மனுதாரருக்கு தற்போது 53 வயது ஆகிவிட்டதால் நடத்துநர் பணிக்கான வயது வரம்பை கடந்து விட்டதாகக் கூறி, பணி வழங்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், வழக்கு தொடர்ந்த பிறகு தான் வயதை திருத்தம் செய்துள்ளதையும், 13 ஆண்டுகளாக வழக்கில் முடிவு காணப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, அதற்கு மனுதாரரை குறைகூற முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளார். வாழ்க்கையில் நடக்கும் சிறிய தவறுகள், பாதையையே மாற்றி விடுகிறது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
58 வயது ஓய்வு பெறும் வயதாக உள்ள நிலையில், தற்போது 53 வயதாகும் நாராயணன், வேலையில் சேர விருப்பம் உள்ளதா? என இரண்டு வாரத்தில் போக்குவரத்து கழகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விருப்பப்படும் பட்சத்தில் அவரை பரிசோதித்து தகுதி இருப்பின் அவருக்கு 4 வாரத்தில் நடத்துநர் பணி வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நேரம், இடம் ஒதுக்குங்கள்; நான் வருகிறேன்; - ஆ.ராசா மீண்டும் சவால்!