சென்னை: குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் அடையார் ஆனந்த பவன் வெளியே சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முஸ்தபா என்பவர் செய்தி சேகரிக்க சென்று சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை படம் பிடித்துள்ளார்.
இதனை கண்ட அடையார் ஆனந்த பவன் ஊழியர்கள் சென்று மேலாளர் சஞ்சய் சிங் என்பவரை அழைத்து வந்தனர். நான்கு பேராக சேர்ந்து இங்கு வந்து வீடியோ எல்லாம் எடுக்கக்கூடாது, என மிரட்டி செய்தியாளரின் செல்போனை பறிக்க முயன்றனர். ஆபாசமாக பேசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
மேலாளர் இவனை உள்ளே தூக்குங்கடா அடித்து கொள்ளுவோம் என மிரட்டியுள்ளார். செய்தியாளர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி வந்து குரோம்பேட்டை போலீசாரிடம் தெரிவித்தார்.
தகவலின் பேரில் வந்த போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர். இதனால் சக பத்திகையாளர்கள் ஒன்று கூடி ஊழியர்களை கைது செய்ய வலியுறுத்தியதன் அடிப்படையில் அடையார் ஆனந்த பவன் மேலாளர் சஞ்சய் சிங் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அடையார் ஆனந்த பவன் ஊழியர்கள் தடுக்க காரணம், அவர்கள் உணவகத்தில் கழிவுநீரை தொட்டி கட்டி தேக்கி வைத்து கால்வாயில் விடுகின்றனர். இதனால் கழிவுநீர் ஜி.எஸ்.டி.சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது.
எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் உணவகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: மாணவர்களின் குறைகளை ஆன்லைன் மூலம் கேட்க நடவடிக்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி