சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம தொடங்கியதிலிருந்து, விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , ஈபிஎஸ் தரப்பில் பிரம்மாண்டமாக பொதுக்குழுவிற்கான ஏற்பாடு என மோதல் நீடித்து வந்தது.
பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்த நீதிமன்ற உத்தரவையடுத்து இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு, கல்வீச்சு என மோதல் ஏற்பட்டது.
அதனையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக அலுவலக கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வாழ்க ஓபிஎஸ் என கோஷமிட்டனர்
ஓபிஎஸ் மீது வழக்கு: அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி நுழைந்ததாகவும், தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு ஆதரவாளர்களிடையும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை கழகத்தில் ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில், 11 அதிமுகவினர் மற்றும் 2 போலீசார் காயமடைந்தனர். காவலர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம்!