சென்னை: அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தியும், அதிமுக உறுப்பினர் கார்டை போலியாக அச்சடித்து பொதுமக்களிடம் பண வசூலில் ஈடுபடுவதாக கே.சி பழனிசாமி மீது முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களத் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசுகையில், அதிமுகவுக்கு சம்பந்தம் இல்லாத கே.சி பழனிசாமி, அதிமுகவின் பெயரை கெடுக்கும் நோக்கில் பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு ஜாதி, மதம், இன மோதல் இல்லாத அமைதி பூங்காவாக இருந்தாகவும், தற்போது எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு இருந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்ததும் குறிப்பிட்ட மதத்தினருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பொது மக்களுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளிடம் இரும்பு கரத்தை காட்டாமல் அதிமுக மீது இரும்பு கரத்தை காட்டுவதாகவும், தீவிரவாத அமைப்புகள் மீது கரும்பு கரம் காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் பேரணி நடத்த அனுமதி கொடுக்கவில்லை எனவும், திமுகவின் இரட்டை வேடத்தால் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும், இதே நிலை தொடர்ந்தால் கடந்த காலத்தை போலவே திமுக ஆட்சி கலைக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
திருமாவை போலீஸ் விசாரிக்க வேண்டும்: அம்பேத்கர் பிறந்த நாளன்று பாபர் மசூதி இடிப்பும், காந்தி பிறந்த நாள் அன்று ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதால் ஏதோ சதி திட்டம் இருப்பதாக திருமாவளவன் கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, திருமாவளவன் எந்த அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்பதை போலீஸ் அழைத்து விசாரிக்க வேண்டும் என கூறிய ஜெயக்குமார், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே அதிமுகவின் எதிர்பார்ப்பு எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், அமைச்சர்களான பொன்முடி ஓசி பஸ் என மகளிரை அவமானப்படுத்தியதாகவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர் குறவர் மக்களை கொச்சைப்படுத்தியதாகவும், பெண்ணின் தலையில் மனுவை தட்டி அவமானப்படுத்தியதாகவும், பெரியகருப்பன் ஊடக்கத்தினரை மிரட்டியதாகவும், ஆர்.எஸ்.பாரதி ஊடக வேசிகள் என கூறியதாகவும், துரைமுருகன் அரசு ஊழியரை மிரட்டியதாகவும், குழந்தை போல் இருக்கும் சென்னை மேயரை அமைச்சர் கே.என். நேரு படாத பாடு படுத்துவதாக என திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பொதுமக்களை இழிவுப்படுத்தும் செயலில் ஈடுபடுவதாக விமர்சனம் செய்தார்.
தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருவதாகவும், தலைவர்களின் சிலைக்கே பாதுகாப்பு இல்லை என அவர் கூறினார். மேலும் கொளத்தூர் தொகுதி மட்டும் மூழ்கக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் வேலை பார்த்து வருவதாகவும், திமுகவே மூழ்கிற கட்சி தான் என ஜெயக்குமார் விமர்சித்தார்.
இதையும் படிங்க: ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ - திண்டுக்கல் சீனிவாசன்