சென்னை:அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் போக்கு நிலவிக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதிக்கு அடுத்த பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 2) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் இருவரும் தனித்தனியாக சந்தித்து, தங்களின் ஆதரவை கொடுத்தனர். இதில் இருந்தே அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
மேலும் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுகவின் தலைமை நிலையச்செயலாளர் எனவும், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் சட்டவிதிப்படி நான்தான் இப்போது வரை ஒருங்கிணைப்பாளர் எனவும் கூறியிருந்தனர். பொதுநிகழ்ச்சிகளிலும் அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் வெளிப்படுகிறது. இந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுக்குழுவிற்கு அரசு அனுமதி அளிக்குமா? அல்லது மறுக்குமா? என்ற சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி மறுக்கும்பட்சத்தில் அதிமுகவின் பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் கருத்து கேட்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:அதிமுக சட்டவிதிப்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ்