சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.28) போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக, மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது மோசடியான ஆவணப் பதிவுகளை ரத்து செய்ததற்கான ஆணையைப் பெற்ற நடிகை வாணிஸ்ரீ, பின் செய்தியாளரைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனது 4 கிரவுண்ட் இடம் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு வழங்கினார்.
இந்த இடத்திற்காக கடந்த 11 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி, தற்போது இந்த இடம் தனக்கு கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். மேலும், இதற்கான பட்டாவை ஆன்லைனில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: திருமணச் சான்று இணையவழி திருத்தம் செய்யும் வசதி தொடக்கம்