தமிழில் ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஜெயலட்சுமி. இவர், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்திருந்தாலும், டிவி சீரியல் நடிகையாகவே மக்களுக்கு பரிட்சயமானவராக உள்ளார். சமூக ஆர்வலரான ஜெயலட்சுமி, சிநேகம் என்ற அறக்கட்டளையையும் நிறுவியுள்ளார்.
![Actress Jayalashmi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4407847_tah.jpg)
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், நடிகை ஜெயலட்சுமி இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டில் சாலையில் உள்ள மரங்கள் நமக்கான வாழ்வியல் பொக்கிஷம். ஆனால், பல நிறுவனங்கள் மரத்தின் மீது ஆணி அடித்து, சேதப்படுத்தி விளம்பரங்களை வைத்துள்ளனர். இதனைத் தடுக்கும்பொருட்டு உயர் நீதிமன்றத்தில் சிநேகம் அறக்கட்டளை சார்பில் பொதுநல வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கில், இனி சாலைகளில் உள்ள மரங்களில் விளம்பரங்கள் செய்தாலோ, சேதப்படுத்தும் செயலில் ஈடுபட்டாலோ ரூபாய் 25,000 அபராதத்தோடு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
மரங்களை நாம் வளர்ப்பதும், பாதுகாப்பதும் நமது கடமை. மரங்களை பாதுகாத்தால் பூமியின் நீர் வளமும் பாதுகாக்கப்படும்”, என்றார். மேலும், தமிழ்நாடு அரசு, இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை தடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.