பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான, சின்னத்திரை நடிகை சித்ரா இன்று (டிச. 09) அதிகாலை சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 28 வயதான அவருக்கு ஜனவரி மாதம் முறைப்படி திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் முன்னதாகவே ஹேமநாத்-சித்ரா இருவரும் கடந்த அக்டோபர் 19ஆம் தேதியன்று பதிவுத்திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் வசித்துவந்த இவர், பெங்களூரு-பூந்தமல்லி நெடுஞ்சாலை இவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பிக்குச் சென்றுவருவதற்காக டிச. 4ஆம் தேதிமுதல், பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிவந்தார். அவருடன், ஹேமநாத்தும் ஒன்றாகத் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு படப்பிடிப்பு முடித்து விடுதிக்குத் திரும்பினார். அங்கு அவர், ஹேமநாத்திடம் குளிக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து வெகுநேரமாகியும் அவர் திரும்பாததால், ஹேமநாத் விடுதி ஊழியருடன் மாற்றுச் சாவியை எடுத்துவந்து அறையைத் திறந்து பார்த்துள்ளார்.
அப்போது சித்ரா, மின்விசிறியில் புடவைமூலம் தூக்குமாட்டி தொங்கியபடி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை மீட்டு, 3.30 மணிக்கு காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், நசரத்பேட்டை காவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து, உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் – 044-24640050 மற்றும் மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104 அழைக்கலாம்.
இதையும் படிங்க: மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை!