செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளுவது குறித்து தாம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தாம்பரம் நகரம், பெருங்களத்தூர் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (டிச.21) நடைபெற்றது. தாம்பரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பா. வளர்மதி கலந்துகொண்டார். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை உறுதிசெய்ய செய்ய வேண்டியவைக் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதனையடுத்து கூட்டத்தில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தற்போது பல புதிய கட்சிகள் முளைத்துள்ளன. வேலை வெட்டி இல்லாதவர், நடிக்க படம் கிடைக்காதவர்கள், நடித்தாலும் படம் ஓடாதவர்கள், இப்போது புதிது புதிதாக கட்சிகளைத் தொடங்கி வருகின்றனர். படத்தில் நடித்தால் முதலமைச்சராகலாம் என்றால், சிவாஜிகணேசன், விஜய்காந்த் போன்றோர்கள் ஏன் முதலமைச்சராக முடியவில்லை.
இன்று அரசியலுக்கு வந்திருப்பவர்கள் எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துகின்றனர். எம்.ஜி.ஆர் ஆட்சி தருவதாகக் கூறுகின்றனர். ஆனால், எவரும் கருணாநிதி ஆட்சியை கொண்டுவருவோம் எனக் கூறுவதில்லை. ஏன் அவர் மகன் முக. ஸ்டாலின், பேரன் உதயநிதி ஸ்டாலின் கூட கருணாநிதி ஆட்சியை மக்களுக்கு கொடுப்போம் என்று கூறமுடியாத நிலையிலுள்ளனர்.
அதிமுக, புரட்சித் தலைவர் போட்ட விதை. அந்த விதை வளர்ந்து ஆலமரமாகியுள்ளது. மரத்தின் விழுதுகளும், அதில் காய்க்கும் காய்களும் மரம் வைத்தவருக்குத்தான் சொந்தம். அதுபோல்தான், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டவர்களுக்கும், அவரால் வளர்க்கப்பட்ட கட்சியினருக்கும் தான் அவரை உரிமைக்கொள்ளும் தகுதியுண்டு.
புதிது புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் பேரை சொன்னார்கள். அது அவர்கள் நினைத்தளவில் பலனளிக்கவில்லை. அதிமுக மட்டும்தான் நிலையாக உள்ளது. அவரது திருப்பெயரைச் சொல்லிச் சொல்லி வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, அவர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தமானவர். நாங்கள் அவருக்குச் சொந்தமானவர்கள். எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிப்பவர்கள் எல்லோராலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். யார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். மக்கள் மத்தியில் நல்ல பெயர் நமது கட்சிக்குத்தான் இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க : கேங்மேன் பணிக்கு எதிராக நீதிமன்றம் சென்றது ஏன்? - ராஜேந்திரன் விளக்கம்