சென்னை: சூளைமேடு, பெரியார் பாதை மேற்கிலுள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீடு, அரசு புறம்போக்கு நிலத்தில் இரண்டாயிரத்து 400 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மாநகாட்சி அலுவலர்கள் அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகானின் மனைவி அபிதா பானு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “18 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாயிரத்து 400 சதுர அடி நிலத்தை அப்பாவு, அவரது மகன் பாரி ஆகியோர் எங்களிடம் விற்றுவிட்டனர். பிறகு அது அரசு புறம்போக்கு நிலம் எனத் தெரியவந்தது.
வீட்டை காலி செய்யக்கோரி 2018ஆம் ஆண்டு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
வீட்டுக்கு வைத்த சீலை அகற்ற கோரிக்கை
ஆனால், அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில், நான் தொடர்ந்த சீராய்வு மனு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கடந்த 21ஆம் தேதி எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றியது சட்ட விரோதமானது.
வீட்டில் எங்களுடைய உடைமைகள் மட்டுமல்லாமல் இரண்டு வெளிநாட்டுப் பூனைகளையும் உள்ளே வைத்து அலுவலர்கள் பூட்டி விட்டனர். ஆகையால் மாநகராட்சி அலுவலர்கள் வைத்த சீலை அகற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் 2ஆவது நாளாக விசாரணை