சென்னை: அறிமுக இயக்குநர் ஷிவ மாதவ் இயக்கத்தில் 21 ஆண்டுகளுக்குப்பின் பாக்யராஜ் கதை நாயகனாக நடித்துள்ள 3.6.9. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(ஏப்ரல்.18) சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ், நடிகர் ஆரி, படத்தின் இயக்குநர் ஷிவ மாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்படத்திற்கு மாரிஸ்வரன் மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா இசை, ஶ்ரீநாத் எடிட்டிங், கலை இயக்குநர் ஶ்ரீமன் பாலாஜி. இப்படம் 81 நிமிடங்களில் எடுக்கப்பட்டு உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
ஆரி
நடிகர் ஆரி பேசுகையில், ’இக்கதையின் தலைப்பு எனது கார் நம்பர். பீஸ்ட் படம் ஓடவில்லை என்று திரையரங்க உரிமையாளர் சொல்கிறார். மக்கள் சொல்லலாம் திரையரங்க உரிமையாளர்கள் சொல்லக்கூடாது. கரோனா நேரத்தில் எந்தப் படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இப்பொழுது பெரிய நடிகர்கள் படம் வெளியாகியுள்ளது.
ஒரு படத்தை உயர்த்தி இன்னொரு படத்தை தாழ்த்திப் பேசாதீர்கள். ஒரு கண்ணில் வெண்ணெய்யும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கக்கூடாது. கதை ஆசிரியர்கள் இல்லாததுதான் தமிழ் சினிமாவில் தேக்க நிலைக்குக் காரணம். தமிழ் சினிமா தன்னை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இணைப்பு மொழி நமக்கு தமிழ்தான்’ என்றார்.
பாக்யராஜ்
நடிகர் பாக்யராஜ் பேசுகையில், 'திரையில் வருபவர்கள் மட்டும்தான் ஹீரோவா? கதை, திரைக்கதை எழுதியவர்கள் எல்லாம் ஹீரோ இல்லையா. திரைக்குப் பின்னால் பணியாற்றியவர்களும் ஹீரோ தான். இதுவரை நான் கிறிஸ்தவராக நடித்ததே இல்லை.
இப்படத்தில் கிறிஸ்டியன் பாதிரியாராக நடிப்பது புதிதாக இருந்தது. விமர்சனம் செய்வதற்காகத் தான் நாம் படமே எடுக்கிறோம். எவ்வளவு கடினமாக விமர்சனம் செய்தாலும் அதை நாம் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: SK20 படத்தின் தயாரிப்பாளர் மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்!