திரைப்பட நடிகர் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பாக நான் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டேன். அந்த வார்த்தையை மதித்து நோட்டாவிற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு தொகுதிகளில் நோட்டாவிற்கு வாக்களித்து இருப்பது ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் ஆதங்கமாவாகவும் உள்ளது. மத்தியில் வென்ற பிரதமர் மோடிக்கும், மாநிலத்தில் கணிசமான தொகுதிகளில் வென்ற திமுகவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாற்றாந்தாய் மனதோடு தமிழ்நாட்டினை பார்க்க வேண்டாம் என்ற கோரிக்கையை பிரதமருக்கு வைக்கின்றேன். மக்களின் தேவை என்பதை என்ன என்பதை உணர்ந்து மாநிலத்தில் உள்ள அதிமுகவும், மத்தியில் உள்ள பாஜகவும் செயல்பட வேண்டும்.
மக்களுக்கு தேவை இல்லாத திட்டங்கள் வந்தால் அதற்கு இவர்களே பொறுப்பேற்க வேண்டும். இருக்கின்ற கட்சிகள் இனிமேல் நோட்டா வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஏதாவது திட்டங்கள் கொண்டு வர உத்தேசித்தால் அதை மக்களிடம் கேளுங்கள். அப்பொழுது அந்த திட்டம் பயன் உள்ளதா, இல்லையா என்பது தெரிந்துவிடும். பொறுப்புணர்ந்து கட்சிகள் செயல்பட வேண்டும்” என்றார்.