சென்னை: அடையாறு காந்தி நகரில் சொகுசு கார் வேகமாகச் சென்றதால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதேபோல் குடிபோதையில் திருவான்மியூர் பகுதியில் காரை ஓட்டியதால் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோன்று நேற்று முன்தினம் (பிப்ரவரி 13) இரவு சென்னை அண்ணா நகரில் தாறுமாறாக ஓடிய கார் சூப்பர் மார்க்கெட் உள்ளே நுழைந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து இரவு நேரங்களில் வாகன விபத்துகள் நடைபெற்றது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதை, அதிவேகமாக கார் ஓட்டுவதால் விபத்து அதிகரித்துவருகிறது. அண்ணா நகர், திருவான்மியூர், அடையாறு போன்ற பிரதான பகுதிகளில் கார் ரேஸ்கள் சனி, ஞாயிறுகளில் நடைபெறுவதாகும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து தற்போது வரை 704 வழக்குகள் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரவு ஊரடங்கு காலத்தில் விபத்துகள் குறைந்திருந்த நிலையில், ஊரடங்குத் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் காவல் துறையினர் கவனம் செலுத்திவருகின்றனர். இதனால் போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனை சரிவர மேற்கொள்ளவில்லை எனப் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே காவல் துறையினர் இரவு நேரங்களில் அதிகளவில் வாகன சோதனை நடத்தினால் மட்டுமே இதுபோன்ற விபத்துகள் குறையும் எனப் பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைவைக்கின்றனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து லீக் ஆகும் வினாத்தாள்: அதிர்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை