தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழ்நாடு மக்களை பாதுக்காக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்னர்.
அரசு பணியாளர் சங்கங்களின் மேற்குறிப்பிட்ட விருப்பத்தினை தீவிர பரிசீலினை செய்து அதனை ஏற்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட நாள்களுக்கான ஊதியத்தினை அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில், பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி, மே அல்லது ஜூன் மாதத்திற்கான ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களது ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாள்களுக்கான ஊதியத்தை வழங்க விரும்பும் அலுவலர்கள் / பணியாளர்கள்/ ஆசிரியர்கள், அதற்கான தங்களது விருப்பத்தினை சம்மந்தப்பட்ட ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும். பிடித்தம் மேற்கொள்ளப்படும் மாதத்திற்குரிய நிகர ஊதியத்தினை அடிப்படையாக கொண்டு பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும்.
அதன் பொருட்டு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை முறையில் உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி, பணியாளர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தினை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்கிடலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.