அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஸ் குமார் பிரதிநிதியாகத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவிலும் இவரே நியமிக்கப்பட்டார். இவர் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கும்வகையில் செயல்பட்டார் எனவும், மத்தியில் ஆளும் பாஜக பிரதிநிதிபோல் செயல்பட்டதாகவும் கல்வியாளர்கள் பலர் அவருக்கு ஏற்கனவே தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதையடுத்து, தற்போது மீண்டும் ஜெகதீஸ் குமார் அண்ணா பல்கலைக்கழகத் தேடுதல் குழுவில் நியமித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்வியாளர்கள் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாள்களில் நடக்கவிருக்கும் நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழு செயல்படுவது சரியல்ல. மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் இணைவேந்தராக இருக்கும்போது அவரைக் கலந்து ஆலோசிக்காமல் துணைவேந்தர் நியமனம் நடத்தக் கூடாது.
அவ்வாறு அந்தப் பணி தொடருமேயானால் அது மாநில உரிமையை மதிக்காத செயலாகும். தன்னிச்சையாக எடுத்துள்ள இந்த முடிவை ஏற்க இயலாது. எனவே தமிழ்நாடு ஆளுநர் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஜெகதீஸ் குமாரைத் தேர்வுக்குழுவில் நியமித்ததைத் திரும்பப் பெற வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வந்தபின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர், உயர் கல்வித் துறை அமைச்சரை கலந்து ஆலோசித்த பின்னரே இந்தப் பணி நடக்க வேண்டும்.
ஏப்ரல் 11ஆம் தேதி தற்போதைய துணைவேந்தர் பதவிக்காலம் முடிவதால் இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உயர் கல்வித் துறைச் செயலர் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தொடர வேண்டும்.
உயர் கல்வித் துறையைப் பாதிக்கும் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எங்களது கண்டனத்தையும், தேர்தல் முடிந்தபின் புதிய அரசு அமைந்த பிறகு துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் நன்றி கடிதம்!