நாடு முழுவதும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்தியாவை பொறுத்தவரை பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றாலும் தமிழ்நாட்டில் ஒரு இடத்தைக்கூட பெறமுடியாமல், ஏற்கனவே இருந்த ஒரு இடத்தையும் இழந்தது. கடந்தத் தேர்தலில் 37 எம்.பி.க்களுடன் மக்களவையில் நுழைந்த அதிமுக இந்த முறை ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அத்தொகுதியின் தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏ.சி.சண்முகம் இன்று எழும்பூரில் திறக்கப்பட்டுள்ள ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம், ”வேலூரில் தேர்தல் நடக்காததால் மக்கள் கோபமாக இருக்கின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி வழங்க மக்கள் வாக்களித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை அதிமுகவையும், திமுகவையும் மாறி, மாறி வெற்றிபெற வைப்பது தமிழ்நாடு மக்களின் வழக்கம்தான். வேலூரில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் தேனியுடன் சேர்த்து வேலூரிலும் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்” என்றார்.