சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்த ஆளுநர் உரையை புறக்கணித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபூபக்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யாமல், மத்திய அரசு அவர்களின் போராட்டத்தை நசுக்குவது கண்டனத்திற்குரியது.
பாஜகவினர் தொடர்ந்து பெரியார், திருவள்ளுவர் சிலைகள் மீது காவி சாயம் பூசி வெறுப்பு அரசியல் செய்து வந்தனர். அதேபோல், தற்போது நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமனை, பெயரளவில் மட்டுமே கைது செய்துள்ளனர். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பாஜக மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சனைகள் செய்து வருகிறது. ஆனால், தமிழக அரசு அதனை வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு சிறுபான்மை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை கண்டித்தே இந்தக் கூட்டத்தொடரை புறக்கணிக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடர்! - காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பு!