சென்னை: தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு மட்டும் 3 லட்சத்து 74 ஆயிரத்து 397 பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இதில் பாதியளவு விபத்துகள் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாலேயே ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைத் தீவிரமாக கண்காணித்து வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் அனைத்து மாவட்ட காவல் துறையினரும் விழிப்புணர்வு, சிறப்பு சோதனைகளை மேற்கொண்டனர்.
விழிப்புணர்வு பிரசுரங்கள்
குறிப்பாக சென்னையில் போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ஆகஸ்ட் 01 முதல் அக்டோபர் 31 வரை கடந்த 3 மாதங்களில் மட்டும் 11ஆயிரத்து 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே விபத்துகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டாசு வெடித்ததில் தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழப்பு - தீபாவளியில் சோகம்