தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு என்று பல சிறப்புகள் உள்ளன. ஆடிப்பிறப்பு தமிழ் மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் மாதமாகும்.
சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் அதாவது, ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும்.
ஆடி மாதத்தின் தொடக்கமே புண்ணிய காலமாகக் கருதப்படும். இந்த நாளில் முன்னோர்களுக்குரிய வழிபாடுகளைச் செய்வது மிகவும் புண்ணிய பலன்களைத் தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
ஆடிப் பட்டம் தேடி விதை, ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும், ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும், ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி, ஆடிக் கூழ் அமிர்தமாகும் என்பன ஆடி மாதம் குறித்த பழமொழிகளாக மக்கள் மத்தியில் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் சிறப்பு
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மூன்று மாதங்களும் இறை வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்டவை. அதில் ஆடி மாதத்திற்கு அம்மன் மாதம் என்றே பெயர். ஆடி மாதம் பிறந்துவிட்டாலே அம்மன் கோயில்களில் பண்டிகைகள், திருவிழாக்கள் களைகட்டும்.
ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாகர் சதுர்த்தி, வரலட்சுமி நோன்பு ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடிப்புரம், கருட ஜெயந்தி என ஆடி மாதத்தில் பல சிறப்புவாய்ந்த நாள்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக் கிழமையும் சிறப்பு வாய்ந்த நாள்களாகும்.
ஆடி மாதத்தில் குலதெய்வத்தின் கோயிலுக்குக் குடும்பத்துடன் செல்லும் பழக்கம் உடையவர்கள் அந்த மாதத்தில் சுபநிகழ்ச்சியைத் தவிர்த்தனர். திருமணம் முடிந்த கையோடு தம்பதியரைப் பிரிக்க வேண்டியிருக்குமே என்பதால் திருமணத்தையும் தவிர்த்தனர். இதனால் நாளடைவில் ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்ற தவறான கருத்து நிலவுகிறது.
தம்பதிகள் தாம்பத்யத்தில் ஈடுபடக் கூடாதா?
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்துவைக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு பிரித்துவைப்பதன் காரணத்தைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால் இந்தச் சந்தேகம் எழாது. ஆடி மாதம் என்றவுடன் புதுமணத் தம்பதியரைப் பிரித்துவைக்க வேண்டும் என்பதே நம் மனத்தில் தோன்றுகிறது.
ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், அச்சமயம் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவித்த தாய்க்கும் உடல் நலம் கெடும், அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்துவைக்கப்படுகிறார்கள் என்று சொல்வோரும் உண்டு. இன்னும் ஒரு சிலர் சித்திரையில் பிள்ளை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது என்று மூட நம்பிக்கையையும் பரப்பிவைத்திருக்கிறார்கள்.
ஆடி பட்டம் தேடி விதை
ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் நம் முன்னோர்கள் ஈடுபட்டனர்.
ஆடி மாதம் விவசாயத்திற்காகச் செலவுசெய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது. அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்தச் சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.
ஆடியில் பர்ஸ் காலி
பல சிறப்புகள் வாய்ந்த இந்த ஆடி மாதத்தில் நாளடைவில் வந்த சில சித்திரிப்புகளாலும் மூட நம்பிக்கைகளாலும் எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு உருவானது.
மேலும் ஆடி மாதத்தில் புதிதாகத் திருமணமான மணமக்களுக்கு பெண் வீட்டார் சீர்செய்யும் பழக்கம் நம் வழக்கத்தில் உள்ளது. அதனால் ஆடியில் பணம் அதிகளவில் செலவாகும்.
இதையும் படிங்க: ஊரடங்கு தொடரும்