சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(22). இந்த நிலையில் நேற்று(அக்.10) அவரின் பிறந்த நாளில் தான் ஏற்கனவே காவல்துறை வாகனத்தின் அருகே நின்று எடுத்து வைத்த வீடியோவுடன் இணைத்து,புதிதாக கையில் பெரிய அளவிலான பட்டா கத்தியை பிடித்து நிற்பது போன்ற வீடியோக்களை தனது இண்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இவர் பதிவு செய்த வீடியோக்களை கண்டு பகுதிவாசிகள் பயந்தார்களோ, இல்லையோ சங்கர் நகர் காவல்துறையினர் கதிகலங்கித் தான் போயினர். தங்களுக்கே தெரியாமல் தங்களது காவல்துறை வாகனத்தில், நின்றவாறு பட்டா கத்தியை காட்டி வீடியோ பதிவிட்ட அந்த ரவுடி இளைஞர் கோபாலகிருஷ்ணனை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர்.
அவரைப்பிடித்து விசாரித்ததில் வீடியோ எடுத்ததற்கான காரணங்களை அடுக்கத் தொடங்கினார். ஒழுங்காக படிக்காமல் , வேலைக்கும் செல்லாமல் தினமும் ஊர் சுற்றி வந்ததாகவும், இதனால் இவரது தெருவில் வசிக்கும் சக வயதினர் உள்ளிட்ட யாரும் இவரை மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தான் ஒல்லியாக இருப்பதனால் தான் தன்னை யாரும் மதிக்கவில்லை. எனவே எப்படியாவது பெரிய ரவுடியாக வலம் வர வேண்டும். அப்பொழுது தான் இந்த ஊரே தன்னை கண்டால் நடுங்கும் என்று இளைஞர் கோபாலகிருஷ்ணன் நினைத்து, அதற்காக காவல்துறையினர் தங்களது வாகனங்களில் ரோந்து வந்து செல்லும் இடங்களை ரகசியமாக நோட்டமிட தொடங்கியுள்ளார்.
பின்னர் காவல்துறையினர் அசந்து இருந்த நேரம் பார்த்து, அவர்களது வாகனத்தின் அருகே நின்றவாறு வகை வகையாக போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டார். அங்கு ஏதோ சாதனை புரிந்த மகிழ்ச்சியில் தனது வீட்டில் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை அலேக்காக தூக்கி சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இவ்வளவு பெரிய பட்டா கத்தி இவருக்கு எங்கிருந்து கிடைத்தது. இந்த வீடியோவை வெளியிட்டதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சமீப காலமாக பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடும் கலாச்சாரம் இளைஞர்களின் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இது போன்ற நபர்கள் மீது காவல்துறையினர் தயவுதாட்சண்யமின்றி இரும்புக் கரம் கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ள நோட்டு மற்றும் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றிய இருவர் கைது