சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 வருடங்களுக்கு முன்பு தேர்ச்சி பெற்ற பின்னும் இது வரை பணியமர்த்தப்படாத பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆடு மேய்த்து வருகிறார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் எப்படியாவது தனது மகனையோ அல்லது மகளையோ அரசுப் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பெற்றோர் போட்டிப் போட்டுக் கொண்டு உயர்கல்வியைச் சிரமப்பட்டுப் படிக்க வைக்கின்றனர் . கிராமங்களில் படிப்பறிவில்லாத பெற்றோர்களும் தனது குழந்தை தன்னை போல் படிக்காமல் இருந்துவிடக் கூடாது என ஆவலுடன் படிக்க வைத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஆண்டு தோறும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தாண்டு 36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், ஆசிரியர்கள் நியமனம் என்பது மட்டுமே இல்லாமல் இருந்து வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் 13331 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் மதிப்பீட்டில் நியமிப்போம் என அறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டிற்கும் மேல் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் இடங்களில் புதிய ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் பட்டப் படிப்பு முதுகலை ஆசிரியர் பட்ட பயிற்சி பெற்றவர்களும் வேலை இன்றி காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் கால முறை ஊதியத்தில் நிரப்பப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் தற்பொழுது தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களுக்கு வேலை கிடைக்காது எனக் கருதி ஆடு மேய்க்கும் பணிக்கும் செல்ல தொடங்கியுள்ளார் அவர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கோடியமங்கலம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் ஆசிரியர் சுரேந்திரன் கூறியதாவது, "ஆசிரியர் தகுதித் தேர்வில் 2017ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றும் 5 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல், ஆடு மேய்த்து வருகிறேன். மிககுறைவான சம்பளத்தைப் பெற்றும் பெற்றோர்கள், 3 வேலை உணவுக் கிடைக்காத நிலையிலும் படிக்க வைத்தனர்.
ஆனால் படித்து வெற்றி பெற்றும் ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியவில்லை. அரசு கூறியது போல் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் பணி வழங்கப்படவில்லை. இதனால் வேறு பணிக்குச் சென்று வருகின்றனர். அரசு தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற தங்களை பணியில் அமர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையிலும் அக்னிபத் திட்டம்; கொந்தளிக்கும் ஆசிரியர்கள்!