பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானவர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்கி வருகின்றனர். கடை வீதிக்குச் சென்றால் துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 50%, 60%, 70% தள்ளுபடி விலை, சலுகைகள், பரிசுகள், விளம்பரங்கள் என மக்களை காந்தம் போல இழுக்கும் துணிக்கடைகள்.
மக்களும் ரெடிமேட் சட்டைகள், பேண்டுகள், ரெடிமேட் சுடிதார்கள் என வாங்கி அப்படியே உடுத்திக் கொள்ளும் வகையிலான ஆடைகளையே விரும்புகின்றனர். முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே துணி எடுத்து, அதனைத் தையல்காரரிடம் கொடுக்க வேண்டும்.
துணியை நமக்கு ஏற்றார் போல் தைத்து அதனை உரிய நேரத்தில் திரும்பப் பெறுவதே பெரிய போராட்டம்தான். இப்போதெல்லாம் இந்தக் காட்சியைப் பார்க்க முடிவதில்லை. சென்னை மாநகரத்தின் பல இடங்களில் தையல் கடையை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இப்போதெல்லாம் தீபாவளி மாதிரியே இல்லை என, கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார் தையல் கடை உரிமையாளர் புவனா.
கூர்மையான பார்வையால் ஊசியில் நூலை நுழைந்து, தைத்துக்கொண்டிருந்த அவர் நம்மிடம் பேசினார். "முன்னாடி நிறைய வேலை இருக்கும். இப்போது பெரும்பாலானவர்கள் ரெடிமேட் ஆடைகளையே விரும்புகின்றனர். அப்படியே தைக்க வந்தாலும் சிறு சிறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே தவிர, முழு ஆடையையும் எங்களிடம் தைப்பது இல்லை.
இப்போதெல்லாம் தீபாவளி போன்றே இல்லை" என்றார். நீங்கள் ஏன் உங்களுக்கு ஏற்ப, பிரத்தியேகமாக ஆடை தைத்துப் போடுவதை விரும்பவில்லை என மக்களிடம் கேட்டால், துணியின் விலைக்கு மேல் தையல் கூலி என பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகவில்லை என்று கூறுகின்றனர்.