நீலகிரி: சூலூர் விமானப்படை விமான நிலையத்தைச் சார்ந்த ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைத்தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 ராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
சூலூரில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்திற்கு புதன்கிழமை காலை 11.48 மணியளவில் கிளம்பிய ஹெலிகாப்டர் 12.08 மணிக்கு குன்னூர் , காட்டேரி மலைப்பகுதி அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் விபத்திற்குள்ளானது.
குடியிருப்புப்பகுதி அருகே விழுந்த ஹெலிகாப்டரில் இருந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்கமுயற்சித்து, பின் காவல் துறைக்கும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
கிராம மக்கள் தீப்பற்றி எரிந்த ஹெலிகாப்டரில் இருந்த இருவரை உயிருடன் மீட்ட நிலையில் பள்ளத்தாக்குப் பகுதியில் விழுந்த அலுவலர் ஒருவரையும் உயிருடன் மீட்டனர். அவரை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேரில் இருவர் உயிரிழந்த நிலையில் ஹெலிகாப்டர் பைலட் வருண் சிங்கிற்கு குன்னூரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பைலட் வருண்சிங்கை பள்ளத்தாக்கில் இருந்து மீட்ட நஞ்சப்பசத்திரத்தைச் சார்ந்த வியாபாரி மூர்த்தி இது குறித்து கூறுகையில்,
'மதியம் 12 மணியளவில் தேயிலை எஸ்டேட் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்து விட்டு நண்பர்களோடு சம்பவ இடத்திற்குச் சென்றேன். அப்போது ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.
இதனையடுத்து கிராம மக்கள் உதவியுடன் நீர் ஊற்றி நெருப்பை அணைக்க முயன்றோம். அதே சமயம் அதில் இருந்தவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், தீப்பிழம்பு அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை. எனினும் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் யாரேனும் உள்ளார்களா எனப் பார்த்த போது அங்கிருந்து 'Help me' என குரல் வந்தது.
இதனையடுத்து அந்தத் திசையை நோக்கி நானும் எனது நண்பர்களும் சென்றோம். அப்போது உடல் கருகிய நிலையில் ஒருவர் கிடந்தார். அவர் அருகே மற்றொருவர் உயிருடன் இருப்பதைப் பார்த்து அவரை மீட்டு மேலே கொண்டு வந்தோம். அவர் மேலே வரும்போது Thanks என கூறினார். இதனையடுத்து அவரை ராணுவத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்தான் ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் வருண் சிங் எனத் தெரியவந்தது. அவர் தற்போது மேல்சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் நலமுடன் திரும்பி வரவேண்டும். அவர் குணமடைந்து வீடு திரும்பினால் எங்கிருந்தாலும் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிபின் ராவத், 12 பேர் மரணம்: தொடங்கிய விசாரணை... ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு!