சென்னை: உலக நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து சென்னை வரக்கூடிய பயணிகள் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நைஜீரியா நாட்டிலிருந்து கடந்த 12ஆம் தேதி விமானம் மூலம் சென்னை வந்த புழுதிவாக்கத்தைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவருக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஒமைக்ரான் பாதிப்பு
அப்போது கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது. இதையடுத்து முதியவர் நங்கநல்லூரில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்திக்கொண்டார். ஐந்து நாள்களுக்குப் பின் உடல் வலி, இருமல் அதிகமாக இருந்ததால் மீண்டும் பரிசோதனை செய்தபோது முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவர் கிண்டி கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முதியவருடன் தொடர்பிலிருந்த விடுதி ஊழியர்கள், உறவினர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் நலமாக உள்ளனர். அவர்களது பரிசோதனை முடிவு வந்த பின்னரே நோய்த் தொற்று பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும். பரிசோதனை செய்யப்பட்டுள்ள நபர்களைச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்துவருகிறார்கள்.
இதையும் படிங்க: கரோனா மூன்றாம் அலை: விஞ்ஞானி கருத்து என்ன..?