காஞ்சிபுரம்: பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கும் தனது அண்ணனுக்கும் தெற்கு ரயில்வேயில் உதவி பொறியாளராக வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சத்தை பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணையை சிலர் வழங்கி ஏமாற்றி விட்டனர்.
வேலை தேடிக்கொண்டு இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1 கோடியே 70 லட்சத்திற்கும் மேல் பணத்தை பெற்று தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் ரெஜினா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்ட ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரை கைது செய்தனர்.
விசாரணை செய்ததில் ஜெயகாந்தன், தான் தெற்கு ரயில்வேயில் கபடி பயிற்சியாளராக பணிபுரிவதாகவும், தெற்கு ரயில்வேயில் Station Master, JE, AE, Ticket Section, Mechanic, RPF போன்ற வேலைகளுக்கு, விளையாட்டு ஒதுக்கீட்டு பிரிவில் மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 43 பேரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணைகள் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.
கைதான ஜெயகாந்தனிடமிருந்து போலியான பணி நியமன ஆணைகள் மற்றும் அது தொடர்பான போலி ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளியை கைது செய்த காவல் ஆய்வாளர் ரெஜினா மற்றும் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், "பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வழங்குவதில்லை.
ஆகவே, வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம், வங்கியின் மூலமாகவோ,
ரொக்கமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பண பரிமாற்றம் செய்ய வேண்டாம்” சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் மதுரையை கலக்கும் ’மாஸ்டர்’ விஜய்