சென்னை: மடிப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைத்துக் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை காரில் கஞ்சா கடத்தி வருவதாக பெரும்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர், இன்று அதிகாலை பெரும்பாக்கம் தேவாலயம் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
30 கிலோ கஞ்சா கடத்தல்
இந்தச் சோதனையின்போது, ஆந்திரா மாநிலத்திலிருந்த வந்த காரை சோதனை செய்கையில், 30 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
பின்னர், ஓட்டுநரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அவர் ஆந்திரா மாநிலம் தடா பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (33) என்பதும், ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து, பாலமுருகனிடம் இருந்து 30 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தியதிற்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை - நான்கு பேர் கைது